
அனைத்து அரசுப் பணிகளும் போட்டித் தேர்வு, தகுதித் தேர்வுகள் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் தனியார் பயிற்சி மையங்கள் ஏகத்திற்கும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பண வசதியுள்ள இளைஞர்கள் பெருநகரங்களில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் வசதியில்லாத ஏழை கிராமப்புற மாணவர்கள் தங்கள் கனவை நினைவாக்க ஒவ்வொரு இடமாக தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி கிளை நூலகத்திற்கு தினசரி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் காலை முதல் மாலை வரை வந்து தங்கி இருந்து படித்துக் கொண்டிப்பதை அறிந்து அங்கே சென்றபோது, ஆலங்குடி மட்டுமின்றி சுற்றியுள்ள 20 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து தேவையான புத்தகங்களை எடுத்து குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்தனர்.

சுமார் 50 ஆயிரம் புத்தகங்களோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஆலங்குடி கிளை நூலகர் சுடர்வேல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேர்வுக்களுக்கான புத்தகங்களை கேட்டு வாங்கி வைத்ததுடன் அவர்கள் படிக்கும் நேரம் வரை காத்திருந்து மூடுகிறார். இங்கே படித்த பலர் குரூப் 1, 2 என பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் உள்ளனர். பல நேரங்களில் இளைஞர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதுடன் அவர்கள் நகல் எடுக்கவும் உதவுகிறார்.
இத்தனை இளைஞர்களை அரசுப் பணியாளராக பயிற்சி அளிக்கும் இந்த நூலகத்தில் ஒரு கழிவறை கூட இல்லாததால் இளம் பெண்கள் பலர் வந்து சில நாளிலேயே நின்றுவிட்டனர். இது போன்ற நூலகங்களில் அவசியம் ஒரு கழிவறையாவது வேண்டும் என்பதே வாசகர்களின் கோரிக்கையாக உள்ளது.