தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!

TN ASSEMBLY ELECTION POLLING PEOPLES ELECTION COMMISSION

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் நாளை (06/04/2021) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளை காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெறுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் கடைசி ஒருமணி நேரத்தில் வாக்களிக்கலாம். அதாவது, நாளை மாலை 06.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை வாக்களிக்கலாம். 234 தொகுதிகளிலும் 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்2 பேர் என மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் போட்டியிடுகின்றனர். எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வமும், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், கோவில்பட்டியில் டிடிவி.தினகரனும், கோவை தெற்கில் கமல்ஹாசனும், திருவொற்றியூரில் சீமானும் போட்டியிடுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான 10,813 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 537 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 திருநங்கைகள் ஆகியோர் நாளை வாக்களிக்க உள்ளனர். கரோனா பாராமல் தடுக்க, வாக்காளர்கள்முகக்கவசம், கையுறை ஆகியவை அணிந்து வாக்களிக்க வேண்டும்.

45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு இன்டர்நெட் மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவத்தினர் 23,200 பேர், தமிழக சிறப்பு காவல்படையினர் 8,010 பேர், ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, சிறை வார்டன்கள் உள்ளிட்ட 34,130 பேர்,வெளிமாநில காவல்துறையினர் 6,350 பேர், வெளிமாநில ஊர்க்காவல் படையினர் 12,411 பேர் என மொத்தம் சுமார் 1.58 லட்சம் ஈடுபடுகின்றனர்.

80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி!

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இலவச வாகன வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,வாடகை வாகனங்களுக்கு உள்ள செயலி (UBER APP) பயன்படுத்தி இலவசப் பயணத்துக்கு முன்பதிவு செய்யலாம். விருப்பத்தின் பேரில் அவர்கள் இந்த வசதியைப் பெற்று ஜனநாயகக் கடமையாற்றலாம். 5 கி.மீ. தூரம் வரை பயணிப்பதற்கான தொகைரூபாய் 200 வரையான கட்டணத்தை தேர்தல் ஆணையமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Polling booth tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe