'Tollgate expiry no longer exists' - Minister E. Velu replies

வேலூரில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை பார்வையிட்ட தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது 'இந்த மருத்துவமனை கட்டுவதற்கு சிறுபான்மையினர் ஓட்டு அதிகமாக இருப்பதால் மத்திய அரசு திட்டத்தில் இந்த மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது' என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்து பேசிய எ.வ.வேலூ,' ஒன்றிய அரசு கொடுக்கின்ற எந்த நிதியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து நாம் கொடுக்கிற வரிப்பணம் தான். அது நாம் கட்டுகின்ற ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் இருந்து மத்திய அரசு கொடுக்கும் பணம். அதையேமத்திய அரசு சரியாக கொடுக்கவில்லை என்றுதான் நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசாங்கத்திடம் முறையாக கல்விக்கு கொடுக்க வேண்டிய 2,150 கோடியை கொடுங்கள் என்று நாம் கேட்கிறோம். இதில் அரசியல் செய்பவர்கள் ஏதாவது பேசுவார்கள். மத்திய அரசு பணம் கொடுத்து தான் கட்டுகிறார்கள் என்று சொல்வார்கள். அவர்களுடைய அப்பா வீட்டில் இருந்தா பணத்தை எடுத்து கொடுக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழ்நாட்டினுடைய பணம்தான். எந்த நிதியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து அங்கு சென்ற பணத்தை தான் முறையாக கேட்கிறோமே ஒழிய வேறொன்று அல்ல'' என்றார்.

'காலாவதியான சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் மூடப்படும் என்றீர்கள். அதற்கான நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது' என்ற செய்தியாளர் கேள்விக்கு,'' நான் பலமுறை ஒன்றிய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்திற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்றால் டோல்கேட் முடிந்துவிட்டது என்பது கிடையாது. ஏனென்றால் வசூல் செய்யும் பணம் தொடர்ந்து சாலைகளை பராமரிப்பதற்கும், விபத்து ஏற்படுகின்ற இடங்களில் மேம்பாலசாலைகள் கட்டுவதற்கும் இப்படி பல வகையில் நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இந்த அடிப்படையில் இன்று ஜிஓ போட்டு டோல்கேட் காலாவதி என்பதே கிடையாது என என்னுடைய கடிதத்திற்கு ஒன்றிய அரசாங்கம் பதில் எழுதி அதை சட்டமன்றத்தில் நான் பதிலாக சொல்லி விட்டேன். எனவே ஒன்றிய அரசாங்கம் இனி எந்த டோல்கேட்டையும் நிறுத்துவதில்லை'' என்றார்.