toll plaza 50% pay only chennai high court order extended

Advertisment

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான சாலை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என, 2019-ஆம் ஆண்டு வந்த கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, அதை நீதிபதி எம்.சத்தியநராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தற்போதுள்ள பள்ளங்கள் விரைவில் பழுதுபார்க்கப்படும் எனவும்,இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், சாலைகள் சரிசெய்யப்படும் வரை இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனஉத்தரவிட்டனர். இந்த உத்தரவை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்ற நெடுஞ்சாலை ஆணையத்தின் கோரிக்கையையும் நிராகரித்தனர்.

இந்த வழக்கு டிசம்பர் 21-ல் விசாரணைக்கு வந்தபோது, லோனாவாலா மற்றும் ஆக்ராவில் உள்ளதுதான் தேசிய நெடுஞ்சாலையா என்றும், மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது முதலில் அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது? முறையாகப் பராமரிக்காத சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க எந்தச் சட்டம் வழிவகை செய்கிறது? என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநராயணன், நக்கீரன்ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, 2003-ல் நான்கு வழி சாலை திட்டம் தொடங்கப்பட்டது என்றும், ஆறுவழி சாலையாக மாற்ற திட்டமிட்டு பணிகள் நடந்து வருவதாகவும், கடந்த ஆண்டைவிட தற்போது சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடையும் எனவும்விளக்கம் அளித்தார். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, நெடுஞ்சாலை ஆணையம் விருப்பப்படும் அதிகாரிகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கும்படி அறிவுறுத்தி, பணிகள் முடிவடையும் வரை 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற இடைக்கால உத்தரவை மார்ச் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.