Advertisment

தூத்துக்குடி அருகே நீதிமன்ற தடையையும் மீறி சுங்கக் கட்டணம் வசூல்!

Toll collection near Madurai despite court ban

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் ஐகோர்ட் உத்தரவை மீறி தொடர்ந்து பணம் வசூலிப்பதை கண்டித்தும், ஐகோர்ட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது, நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரிப்பது, கிராம சாலை தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதிகளில் மின் விளக்குகள் அமைப்பது, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் முறையான பராமரிப்பு பணிகளை செய்யவில்லை.

Advertisment

Toll collection near Madurai despite court ban

இந்நிலையில் ஒப்பந்தத் தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தாலும், மாதத்துக்கு ரூபாய் 11 கோடி சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து பராமரிப்பு பணிக்காக வெறும் ரூபாய் 30 லட்சம் மட்டுமே செலவிடுகிறது. இதனால் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே மதுரை எலியார்பட்டி டோல்கேட் மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் ஆகிய இரண்டு டோல்கேட்களிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை டோல்கேட் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளெட் ஆகியோர் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிப்பிட்ட இரு டோல்கேட்களிலும் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்கள் குறித்து அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்குத் தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் சுங்க கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுங்க கட்டணம் உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதும் உடனடியாக கட்டணத்தை உயர்த்தி பணத்தை வசூலிக்கும் டோல்கேட் நிர்வாகம்,

சுங்க கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அதை மதிக்காமல் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது விதிமீறல் என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Toll collection near Madurai despite court ban

உயர்நீதிமன்ற உத்தரவு நகல் எங்களிடம் வராததால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை நாங்கள் சுங்க கட்டணம் வசூலிப்போம் என டோல்கேட் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்த கனரக லாரிகள் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே ஆங்காங்கே நிறுத்தி வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஐகோர்ட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

madurai high court Thoothukudi Toll Plaza
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe