Skip to main content

நெல்லை, தூத்துக்குடியில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Today is a holiday for schools and colleges in Nellai and Tuticorin

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வரும் ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கணக்கிட இருக்கிறது.

மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகன மழையால் பல இடங்களில் இன்னும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழையால் பதினெட்டாம் தேதி ரத்தான அரையாண்டு தேர்வு ஜனவரி இரண்டாம் தேதி நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறை அலுவலர்களுக்கு விடுமுறை பொருந்தாது என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.