
கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் ஒரே நாளில் 5,559 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 86 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,84,278 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 25,776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 15,02,57 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 448 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 279 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 169 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 125 பேர் இணை நோய் இல்லாதவர்கள். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 20,046 ஆக அதிகரித்துள்ளது.