tNPSC Important announcement related to Group - 4 Result Released

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் குரூப் - 4 தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களைத் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.trpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams-ல் அவர்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைகோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்குத் தெரிவு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் மற்றும் கடிதம் வழியாகத் தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 559 பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்கள் 9,491ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.