Skip to main content

குரூப் தேர்வுகள் முறைகேடு வழக்கு! -இடைத்தரகருக்கும் பணி பெற்றவருக்கும் ஜாமீன் மறுப்பு!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகராக செயல்பட்ட காவலருக்கும், பணம் கொடுத்து பணி பெற்றவருக்கும் ஜாமீன் வழங்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 4 மற்றும் 2-ஏ தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

tnpsc group exam malpractice

 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார்,  தமிழ்நாடு காவல்துறையில் முதல் நிலைக்காவலராக வேலை செய்கிறார். இவர் குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சியடையச் செய்வதாகக் கூறி 7 பேரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்தத் தேர்வில் தன் மனைவி மகாலட்சுமியை தேர்ச்சி பெற வைத்து வருவாய்த் துறையில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர,  வி.ஏ.ஓ. தேர்விலும் மோசடி செய்து தன்னுடைய இரு தம்பிகளை தேர்ச்சியடையச் செய்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.  இவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அதுபோல, குரூப் 2 ஏ தேர்வில் போலீஸ்காரர் ஒருவர் மூலம் 13 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று, சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் ஆனந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்