டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எழுந்த முறைகேடுகளால் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு விசாரணையை தொடங்கிய நிலையில் இடைத்தரகர்களாக செயல்பட்ட தாசில்தார்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
"குரூப்-4 தேர்வில் எழுந்துள்ள புகார் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும்" என சட்டப்பேரவையில் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்த நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் (1606) மற்றும் கீழக்கரை (1608) ஆகிய மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்கள் குறித்த விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் தேர்வர்களிடமும் விசாரணையை தொடங்கியது. அவர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் மோசடிக்கு உடந்தையாக இடைத்தரகர்களாக செயல்பட்ட அதிகாரிகள் வெளிப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (24.01.2020) காலையில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ராமேஸ்வரம் சமூகநலத்துறை தாசில்தார் பார்த்த சாரதியும், கீழக்கரை தாசில்தார் வீரராஜீவும் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை சிபிசிஐடி அலுவலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களிடம் நடைப்பெற்ற தொடர் விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு உதவிய உயர் அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்கின்றது சிபிசிஐடி வட்டாரம். இதனால் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

இதனிடையே குரூப் 4 முறைகேடு தொடர்பான புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.