தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் (25.04.2025) வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனப்பாதுகாவலர் மற்றும் சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய 3 ஆயிரத்து 935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இந்நிலையில் நாளை(12.07.2025) நடைபெற உள்ள குரூப் - 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணியானது இன்று (11.08.7.2025) காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது  தனியார் பேருந்துகளில் உள்ள கதவுகளில் ஏ4 ஷீட் மூலம் ஒட்டி சீல் வைக்கப்பட்டுப் பாதுகாப்பற்ற முறையில்  தனியார் பேருந்துகளில் இருந்து வினாத்தாள்களானது அனுப்பி வைக்கப்பட்டது. இத்தகைய செயல் தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து  டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகன் அளித்துள்ள விளக்கத்தில், “குரூப் - 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. எந்தவொரு வினாத்தாள்களும் கசியவில்லை. அதே சமயம் மதுரையைப் பொறுத்தவரையில் கண்டெய்னர் மூலமாக எடுத்துச் செல்லாமல் தனியார் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் வினாத்தாள்கள் பேருந்துகள் மூலம் எடுத்துச் செல்லும்போது காவல்துறையினர் பாதுகாப்புடன் தான் வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய விளக்கம் பெறப்பட்டு இன்று மாலைக்குள் அல்லது நாளை முறைப்படியான அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.