Skip to main content

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு; மறு தேர்வுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

TNPSC Exam Malpractice; Annamalai insisted on re-examination

 

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஒரே மையத்திலிருந்து 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

 

நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இது குறித்து விளக்கம் அளித்தார். 

 

பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. 

 

ஏற்கனவே நில அளவர் தேர்வில் காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.