Advertisment

குரூப்- 1 தேர்வு முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு!

டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

திமுக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பாணை வெளியிட்டது. இதன்படி 2015 நவம்பர் 8- ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்று, முதல் நிலை தேர்வு முடிவுகள் 2016- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டதையும், அதில் 74 பேர் தேர்வு செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

TNPSC EXAM GROUP 1 CBI INVESTIGATION NEED TO DMK PARTY HIGH COURT

மேலும், தேர்வு பெற்றவர்களில் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இந்த குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதற்கான சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே செய்திகள் வெளியானதாகவும், குரூப் 1 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி உள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்த ஸ்வப்னா என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையம் நிறுவனத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டு வருவதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட சம்மந்தப்பட்ட பயிற்சி மையங்களிலிருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அமைச்சர் ஆகியோரும் மாணவரிடமிருந்து 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் திமுக தரப்பு மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருவதால், அரசியல் செல்வாக்கு மிக்க முன்னாள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்திற்கு எதிராக உரிய விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பதாலும், தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை டிஜிபி கட்டுப்பாட்டிலும், மத்திய குற்றப்பிரிவின் விசாரணை சென்னை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விசாரணை உரிய முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போவதற்கான சூழ்நிலை இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வழக்கை சிபிஐயின் இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழக அரசுக்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

CBI investigation chennai high court TNPSC EXAM
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe