Skip to main content

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

 TNGovt increasing Government employees retirement age

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் விமலகண்ணன் தலைமையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 


அதில், இந்தியா முழுவதும் பலகோடி இளைஞர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.  தமிழகத்தில் மட்டும் 85 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். 

கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கிற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கையின் ஒருபகுதியாக தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே அரசாணை 56ஐ பிறப்பித்து அரசுப் பணியிடங்களை இல்லாமல் ஆக்குவது, காலியாகவுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது, புதிய பணிநியமனங்களை நிரந்தர பணியாளராக நிரப்பாமல் தற்காலிக அல்லது ஒப்பந்தப் பணியாளராக நியமனம் செய்வது என தமிழக அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை கலைத்து வருகிறது.

 

 


மேலும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பொருளாதார கொள்கைகளின் விளைவாக சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 50,000 சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டதால் 5 லட்சம் பேர் வேலையிழந்ததாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. பெரும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக என்று சொல்லி அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளது. இது வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெருளாதார அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பொருளாதார சிக்கலிலிருந்து மீண்டெழுவதற்கு வேலைவாய்ப்புகளை பெருக்கவேண்டும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 


ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கின்றன. ஏற்கனவே, மத்திய அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை, வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. எனவே, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.  

இதில் வட்ட துணை செயலாளர் மணிகண்டன் மாவட்ட குழு தினேஷ்பாபு, கிளை செயலாளர் நவீன் ராசித், அருள்செல்வன் மூத்த தோழர் குமார் ஆகியோர்  சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்