Skip to main content

மதுவை வீடுகளில் டோர் டெலிவரி செய்ய முடியாது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

 TNGovt about door delivery of alcohol not possibl



கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டன. 


ஆனால் தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளநிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும் நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுபாட்டில்களை ஆன்லைனில் விற்பனை செய்து டோர் டெலிவரி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, மதுவை வீடுகளில் டோர் டெலிவரி செய்ய முடியாது. டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும், பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்