Skip to main content

காங் தலைவர் கே.எஸ்.அழகிரி பக்ரீத் வாழ்த்து செய்தி

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
K.S.Alagiri Bakrid Wishes

 

இஸ்லாமியர்களின் புனித திருநாளாக கருதப்படும் பக்ரீத் ஆகஸ்ட் 1 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி காங். சார்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

 

இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

 

பல்வேறு மதத்தினரும், தங்களின் தந்தை என போற்றும் ஆபிரகாம் எனும் இபுராஹிம் நபியும், அவருடைய துணைவியார் ஹாஜிரா அம்மையாரும், அவர்களுடைய புதல்வர் இஸ்மாயில் நபியும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்த தியாகங்களை செயலால் நினைவுகூறும் நன்னாளே இந்த தியாக திருநாள். உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்து கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றி பாதுகாக்கிற வகையில், வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நானும் ரவுடி தான் என்பதுபோல சீமான்...” - கே.எஸ். அழகிரி

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

 Tamilnadu congress president K.S.Alagiri says  Seaman is a comedian

 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘ரக்‌ஷா பந்தன்,  ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ. 200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த எரிவாயு சிலிண்டர் விலை குறைப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென்று குறைத்துள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது. ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதையும், பிரதமர் மோடி ரக்‌ஷ பந்தனுக்கு பரிசாக அளித்து இருப்பதாக கூறுகிறார்கள். இதை நான் மக்கள் கைகளில் போட்ட விலங்கை தளர்த்தி இருப்பதாகவே பார்க்கிறேன்.

 

பிரதமர் மோடி, இந்திய மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. எப்போதுமே விலை நிர்ணயம் என்பது மூலப்பொருள் என்ன விலை? அதை உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதற்கான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றை மதிப்பிட்டுத் தான் நிர்ணயிக்கப்படுகிறது. 

 

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் என விற்றது. அன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.70, டீசல் விலை ரூ.60, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 400க்கு வழங்கினார். ஆனால், இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 70 டாலராக விற்கப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரப்படி சிலிண்டரின் விலையை ரூ. 200க்கு தான் வழங்க வேண்டும். ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200க்கு விற்றுவிட்டு தற்போது ரூ. 200 குறைத்து இருப்பதை விட ஏமாற்று வேலை வேறு இருக்க முடியாது. 

 

காங்கிரஸ் ஆட்சியில், நீட் தேர்வுக்கான வரைவு திட்டத்தை வெளியிட்ட போதே ராகுல் காந்தி அதற்கு விளக்கம் அளித்து இருந்தார். விரும்புகிற மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம், விரும்பாத மாநிலங்கள் நீட் தேர்வை விட்டு விடலாம் என்று ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். தமிழகத்தில் ஏன் நீட் தேர்வுக்கான விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறோம் என்றால், இங்கு 90 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அரசுப் பள்ளியில் மாநில பாடத் திட்டத்தைக் கொண்டு மாணவர்கள் படிப்பதால் தான் அதற்கு விலக்கு கேட்கிறோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கு காரணம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற அரசியல் சாசனம் மீதான நம்பிக்கையில் தான். 

 

காங்கிரஸ் கட்சியை வெளியேற்றினால் திமுகவிற்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சீமான் கூறியிருப்பதற்கு ஒரே வரியில் தான் பதில் சொல்ல விரும்புகிறேன். அதாவது, சீமானை ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் பார்க்கிறேன். ஒரு படத்தில் வடிவேலு, ‘நானும் ரவுடி தான்; நானும் ரவுடிதான்’ என்று கூறுவார். அதுபோல் தான் சீமானுடைய கருத்தும் உள்ளது.  அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

பக்ரீத் பண்டிகை; முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

bakrid festival cm mk stalin wishes

 

பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று காலை முதல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தி பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு பக்ரீத் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், “சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை - எளியோரின் பசி தீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனித நேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

 

இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

பக்ரீத் பண்டிகையை மக்கள் எவ்வித சிரமும் இன்றி கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் வகையில் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.