tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப்பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

Advertisment

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.