/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-mic-mdu-art_1.jpg)
ஆங்கில நாளிதழ் ஒன்றில், “தமிழக ஆளுநரின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் ஆளுநரின் நடத்தையில் உள்ள பிடிவாதத்தின் போக்கை அம்பலப்படுத்துகின்றன’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியானது. இதனை சுட்டிக்காட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தமிழக ஆளுநரின் அரசியலமைப்புக்கு முரணான அத்துமீறல்களையும், பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் இழிவான ஒப்புதலையும் ஆங்கில நாளிதழ் சரியாகவே வலியுறுத்தியுள்ளது. கடுமையான வார்த்தைகளால் எழுதப்பட்ட இந்த தலையங்கம், ஆளுநர் தன்னிச்சையாக சட்டமன்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதை சுருக்கமாகக் கூறுகிறது.
மேலும் பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களின் தொடர்ச்சியான கண்டனங்களிலிருந்து மாநிலத்தின் பெயரளவிலான தலைவரான ஆளுநரும், அவரது செயல்களைப் பாதுகாத்து வளர்க்கும் டெல்லியில் உள்ள அவரது பாஜக எஜமானர்களும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது திகைக்க வைக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அருவருப்பான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசியல் பகைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்திய அரசு இதுபோன்ற அதிகப்படியான செயல்களுக்கு வெகுமதி அளிப்பது கவலையளிக்கிறது. பாஜக ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் ஆபத்தில் உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raj-bhavan-art_2.jpg)
இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)