Skip to main content

"எதிர்க்கட்சிகள் குஜராத்தை மறந்து, மறைத்து பேசி வருகிறது" - அமைச்சர் செந்தில் பாலாஜி  

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

tn minister senthil balaji press meet Power supply

 

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதன பிரச்சாரம் குறித்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில் மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பினரிடம் சுமுக உடன்படிக்கை ஏற்பட்ட பின் அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

 

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது ஆனால் அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது.

 

நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழகத்தை குறைகூறும் இயக்கங்கள் தான் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் வினியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது, என்பதை மறந்து மறைத்து பேசி வருகின்றனர். இதுபோன்ற பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

ஸ்தம்பித்த குஜராத்; பாஜகவிற்கு எதிராக வெகுண்டு எழுந்த ராஜ்புத் சமூகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
gujarat rajput struggle against bjp in rupala speech

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை ஆளும் பாஜக அரசு குஜராத்தை கைப்பற்ற வேண்டும் எனத் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ரூபாலா தனது தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒன்று தற்போது பாஜகவிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ''ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை..” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜபுத்திர சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

gujarat rajput struggle against bjp in rupala speech

இதனிடையே, தவறை உணர்ந்த மத்திய அமைச்சர் ரூபாலா ராஜபுத்திர சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், ராஜபுத்திர சமுதாய மக்கள் மனம் மாறவில்லை. ரூபாலாவை பதவி நீக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ராஜ்கோட் தொகுதியில் நிறுத்தப்படும் ரூபாலாவை திரும்பப்பெற வேண்டும் எனப் பாஜகவுக்கு ராஜபுத்திரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாஜக தரப்பில் இதற்கு செவிசாய்க்காததால், குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் போராடுவோம் என்று ராஜபுத்திரர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். அதன்படி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். இதில், ‘நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் ராஜபுத்திரர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ்கோட்டில் பாஜகவுக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் நடத்திய இரண்டாவது பேரணி இதுவாகும். இந்தப் பேரணியில் லட்சக்கணக்கான ராஜபுத்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

gujarat rajput struggle against bjp in rupala speech

இதனிடையே, பேசிய ராஜ்புத் சங்கலான் சமிதி தலைவர் கரன்சிங் சாவ்தா, ''ஏப்ரல் 19-க்குள் ரூபாலாவின் வேட்புமனுவை பாஜக வாபஸ் பெறவில்லை என்றால், தங்கள் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.." என்று தெரிவித்துள்ளார். இது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாஜக வெற்றிக்கு உதவிய ராஜபுத்திரர் சமுதாயம் இந்த முறை போர்க்கொடி தூக்கியிருப்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் ரூபாலாவை திரும்பப் பெறுவது என்பது ராஜ்கோட் தொகுதியில் செல்வாக்குமிக்க அவர் சமூகத்தின் வாக்குவங்கியை பாதிக்கும் எனக் கருதுகிறார்கள். அதனால், இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியாமல் டெல்லி வெள்ளைக் கொடியை காட்டி வருகிறது. ஆனால், ராஜ்கோட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ரூபாலாவிற்கு சமூதாய ஓட்டு இருப்பதால் அங்கு அவர் தப்பினாலும், அவரின் சர்ச்சைப் பேச்சு ஓட்டுமொத்த ராஜபுத்திர சமுதாயத்தினரைப் பாஜகவிற்கு எதிராக ஒன்றுசேர்த்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இருக்கும் ராஜபுத்திர சமுதாயத்தினர், பாஜகவுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால், அவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சர்ச்சை பேச்சு விவகாரம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.