tn kabadi women players issue What is the next step TN govt explanation

பஞ்சாப் மாநிலத்தில் 2024-2025ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கபடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தகைய சூழலில் தான், அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும், தர்பங்கா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும் இடையே இன்று (24.01.2025) கபடி போட்டி நடைபெற்றது.

Advertisment

இந்த போட்டியின் போது எதிர் அணியினர், அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இரு அணிகளும் நடுவரிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நடுவர், அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு அணியினரும் அங்கு இருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டனர். இதனால், அந்த இடமே களேபரமானது. பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “பஞ்சாப் மாநிலத்தில் தமிழக கபடி வீராங்கனைகளைப் பாதுகாப்பாக உள்ளனர். இந்த வீராங்கனைகள் பத்திரமாகத் தமிழகத்துக்குத் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை டெல்லியில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை (25.01.2025) ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்படுவார்கள். கபடி அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை. அவரிடம் விசாரணை முடிந்து அனுப்பப்பட்டார். 3 மணி நேரத்துக்குள்ளாக அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு அனைவரும் பத்திரமாகத் தமிழகம் வர உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.