Tn Govt says Public praise for the cm 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதே சமயம் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் சென்னைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படும் என கருதப்பட்டது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை வெள்ள நிவாரணப் பணிகளைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் மழைநீர் தேங்காமல் சென்றுள்ளது என ஆய்வுப் பணியின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பொதுமக்கள் நேரிடையாக ஒன்று திரண்டு பாராட்டு தெரிவித்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.10.2024) 2ஆம் நாளாகக் கிண்டி ரேஸ் கோர்ஸ், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் நேரிடையாக பார்வையிட்டு மேற்கொள்ளப்படும் மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

Tn Govt says Public praise for the cm

Advertisment

அப்போது, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டு முதலமைச்சரிடம், ‘துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (14.06.2024) நள்ளிரவில் பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பணி நடைபெறும்போது மறுபடியும் நேரிடையாகச் சென்று பார்வையிட்டுத் துரிதப்படுத்தினார். அதன் விளைவாக இப்பகுதியில் நேற்று பெய்த கன மழையின்போதும், 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் மழைநீர் எங்கும் தேங்காமல் சென்றது.

இந்த துரிதமான நடவடிக்கையினை ஒரே இரவில் மேற்கொண்டமைக்காக இப்பகுதி மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக் கூறினார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.