தமிழ்நாட்டில் 8 இடங்களில் புதியதாகச் சிறிய துறைமுகங்கள் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் துறைமுகங்களை உருவாக்கத் தனியார் முதலீட்டாளருக்குத் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் முகையூர் மற்றும் பனையூர் ஆகிய 2 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும், கடலூர் மாவட்டம் சிலம்பு மங்கலத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் வானகிரியிலும் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கபட் உள்ளது.
அதே போன்று நாகை மாவட்டத்தில் விளுந்தமாவாடி என்ற பகுதியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு பகுதியிலும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியும் என மொத்தம் 8 இடங்களில் சிறிய துறைமுகம் அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி சிறிய துறைமுகங்களை உருவாக்குவதற்குத் தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “முதலீட்டாளர்கள் விருப்பத்தின் தெரிவிக்கும் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
அதாவது 30 வருடம் முதல் 99 வருடம் வரை நீண்ட காலத்திற்குக் குத்தகை வழங்கப்படும். இந்த இடங்களில் சுற்றுலா கப்பல் கட்டும் தளம் கடல் உணவு சார்ந்த உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கும் வகையில் அவர்களுக்கான வசதிகள் செய்யப்படும” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.