/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_493.jpg)
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப்பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல்எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)