
சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகச் சிறை விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், “சிறைகளில் சாதிய ரீதியான பாகுபாடு காட்டக்கூடாது. சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி தொடர்பான தகவல்களைக் கேட்கக்கூடாது. சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இடம்பெறக் கூடாது.
சிறைகளில் சாதி ரீதியிலான வகைப்பாடுகள் செய்யக்கூடாது. சாதி அடிப்படையில் சிறைகள் கைதிகளுக்கு பணிகள் மற்றும் வேலைகள் வழங்கக்கூடாது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தையும் முழுமையாகச் சிறைகளில் அமல்படுத்த வேண்டும். சிறைகளில் உள்ள செப்டிங் மற்றும் கழிவுநீர் தொட்டி ஆகியவற்றைச் சுத்தம் செய்யக் கைதிகளை அனுமதிக்கக் கூடாது” எனத் தமிழ்நாடு அரசானது அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.