TN Govt Order Separate Disaster Management Authority for Chennai Corporation

சென்னையில் ஆண்டுதோறும் மழை, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாநகரங்களுக்கு எனத் தனியாகப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எனப் பிரத்தியேகமாகப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதற்கான உத்தரவும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தலைவராகப் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி பணிகள் துறையின் துணை ஆணையர், சென்னை மாநகராட்சி நல அலுவலர், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி, நீர்வளத் துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆகியோர் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Advertisment

இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை ஆணையமானது பேரிடர் காலங்களில் நிகழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பது, மக்களைத் தயார் நிலையில் வைப்பது, காப்பது, மீட்பது, பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு எனப் பிரத்தியேகமாகப் பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளைக் காணும் வகையில் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த ஆணையம் செயல்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதிற்கும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.