ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (75) அவரது மனைவி பாக்கியம்மாள் கடந்த மே 1ஆம் தேதி தோட்டத்து வீட்டில் வீட்டில் துர்நாற்றம் வீசியதுடன் வீட்டின் வெளியே மூதாட்டி பாக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடைப்பதைக் கண்டு உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பார்த்தபோது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் கொலை செய்யப்பட்டு மூதாட்டி பாக்கியம் அணிந்து இருந்த 10 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்கு மண்டல ஐஜி , டிஐஜி , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அரச்சலூர் பகுதியை ரமேஷ், மாதேஷ் , ஆச்சியப்பன் மற்றும் நகைக் கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய நான்கு பேரைத் தனிப்படை காவல்துறையினர் கடந்த மே 19ஆம் தேதி கைது செய்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ரமேஷ், மாதேஷ் , ஆச்சியப்பன் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி அலமேலு இவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோரின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையது தெரியவந்தது. இதற்கிடையே பல்லடம் கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தான் சிவகிரியில் ராமசாமி அவரது மனைவி பாக்கியம்மாள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றம் மூலம் காவல்துறையினர் கஸ்ட்டி எடுத்து விசாரணை நடத்திய நிலையில் நான்கு பேரிடமும் பல்லடம் கொலை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆச்சியப்பன் , மாதேஷ் , ரமேஷ் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகியோருக்கு பல்வேறு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் சிவகிரி கொலை சம்பவத்தை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.