தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நவீன வசதிகளுடன் பெண்கள் தங்குவதற்காக ‘தோழி’ விடுதிகள் செயல்பட்டு வருகிறது. 

பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்கு சென்று பணிபுரியும் மகளிர் நலனைப்  கருத்தில் கொண்டு பாதுகாப்பான விடுதிகளை மாணவிகள் மற்றும் மகளிருக்கு வழங்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோ-மெட்ரிக் வசதி, இலவச வை- பை, பொழுதுபோக்கு அம்சங்கள், அயனிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தோழி விடுதிகள் குறித்த முழுமையான விவரங்களை www.tnwwhcl.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். விடுதி அறைகளில் தனியாகவும், இருவர், நான்கு பேர், ஆறு பேர் என அறையை பகிர்ந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்நிலையில் உதகமண்டலம், திருப்பத்தூர், நாமக்கல், காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகப்பட்டினம் ராணிப்பேட்டை, கரூர்,  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் கிராமம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீர சோழபுரம் ஆகிய 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.