/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/land-silde-cuddalore-art_0.jpg)
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்குத் தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அரசு சார்பில் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த நிலச்சரிவில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “உத்தரகாண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் யாத்திரைக்குச் சென்ற கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கினர் என்பது குறித்து தகவல் பெறப்பட்டது. உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசைத் தொடர்புகொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/apm-art_0.jpg)
அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி, அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.09.2024) காலை முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் அவர்களை விரைந்து மீட்கத் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டு, முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தர்சுலா என்ற நகரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அங்கே ஓரிரு நாட்கள் தங்கி, பின்னர் புதுதில்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)