Skip to main content

மகளிர் உரிமைத்தொகை; புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

TN govt has announced that new applications can be made for magalir urimai thogai

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள ரூ.1 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.  

 

அதே சமயம் தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100  ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை குறித்து அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, விண்ணப்பிக்க முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களைக் கூறி பெண்கள் போராட்டம் நடத்தினர். 

 

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு கோடி பேருக்குதான் ரூ. 1000 வழங்கப்படும் என எவ்வித இலக்குகளும் இல்லை. உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அக்.18 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

நடவு பணிக்காகச் சென்ற 22 பெண்கள்; டிராக்டர் கவிழ்ந்து விபத்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
18 people were injured when tractor in which the women  overturned

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் கிராமத்திலிருந்து 22 பெண்கள் நெல் நாற்று நடவு பணிக்காக திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துகொண்டாபுரம் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை முத்துகொண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (29) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அரக்கோணம் அடுத்த ஆணைப்பாக்கத்தில் இருந்து கோணலம் செல்லும் சாலையில் கன்னியம்மன் கோயில் அருகில் செல்லும்போது அங்குள்ள வளைவில் டிராக்டரை திருப்பும் போது நிலை தடுமாறி கால்வாயில் கவிழ்ந்தது. பக்கத்தில் சேறும் சகதியும் இருந்ததால் பெண்கள் அதில் விழுந்தனர். இதன் காரணமாக கை கால்களில் பலத்த காயங்களுடன் பெண்கள் உயிர்த் தப்பினர். இல்லாவிடில் பெரும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 108 ஆம்புலன்ஸில் 18 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து 4 பேரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், 14 பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

விபத்து குறித்து டிராக்டர் டிரைவர் சரவணனிடம் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மூதுரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, வள்ளியம்மாள், முத்தம்மாள், கோடீஸ்வரி, ரேவதி, பூங்கொடி, வசந்தம்மாள், பொன்னியம்மாள், கிரிஜா, சந்திரம்மாள், சித்ரா, இந்திரா உட்பட 18 பேர் காயம் அடைந்தனர்.