TN govt gave good news to competitive candidates

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி (07.03.2023) அன்று துவங்கி வைக்கப்பட்டது. அதன்படி இப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக ‘பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வு, ரயில்வே தேர்வு (SSC cum RAILWAYS) மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்விற்குக் கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்காக ஆயிரம் பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை மாதம் 14 ஆம் தேதி (14.07.2024) அன்று இரு வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.

TN govt gave good news to competitive candidates

Advertisment

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வு, ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.naanmududalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, நாளை (08.06.2024) முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஜூன் 23 ஆம் தேதி (23.06.2024) ஆகும். தேர்விற்கான நுழைவுச் சீட்டு (HALL TICKET) ஜூலை 9 ஆம் தேதி (09.07.2024) வெளியிடப்படும். இந்த தேர்வு ஜூலை 14 ஆம் தேதி காலை (10 மணி முதல் 11 வரை நடைபெற உள்ளது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.