Skip to main content

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 25/05/2025 | Edited on 25/05/2025

 

TN govt chief kazi passes away; Chief Minister M.K. Stalin condoles!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (வயது 84) காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த தலைமை சலாவுதீன் ஹாஜி முகமது அய்யூப் சாகிப் நேற்று (24.05.2025) இரவு 9 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமியச் சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்