TN govt approves Poonamalli  Parantur Metro Rail project

சென்னையின் 2வது விமான நிலையமாக பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. எனவே இந்த விமான நிலையத்தைச் சென்னை மாநகருடன் இணைப்பதற்குத் தமிழக அரசு சார்பில் மெட்ரோ ரயில் ரயில் சேவை வழங்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் சென்னை பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை 52.94 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கு உரிய மெட்ரோ வழி திட்ட அறிக்கைக்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ.க்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கக் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (02.06.2025) மெட்ரோ ரயில் மத்திய கோபுர கட்டட வடிவமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

மேலும் இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.