TN govt announcement  New revenue taluk with Kolathur as headquarters

சென்னை கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது அயனாவரம் வருவாய் வட்டத்திலிருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர் உள்ளிட்ட 3 கிராமங்கள் அடங்கியுள்ளன. அதோடு 3 லட்சத்து 78 ஆயிரத்து 168 பொதுமக்கள் வசிக்கும் கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூகப் பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் வருவாய் வட்டத்திற்குப் புதிதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 36 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் 8 மாதங்களுக்கான தொடர் செலவினங்களுக்கு ரூ. 1.98 லட்சமும், தொடரா செலவினங்களுக்கு ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.