TN Govt Announcement Help for Madrasi Camp Tamils

டெல்லியில் 'மதராசி கேம்ப்' பகுதியில் 4 தலைமுறைகளாக 300க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கால்வாயின் புனரமைப்பு பணிகளுக்காக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மொத்தமாக 500 குடும்பங்கள் வசிக்கும் கூடிய குடியிருப்பு பகுதிகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அதே பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் மாற்று இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 370 தமிழ் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரை மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக அங்கு வாழும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வெகு தொலைவில் மாற்று இடம் கொடுக்கப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மாற்று இடம் இல்லாதோர் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் பலர் தவித்து வருவதால் அங்கு கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் மதராசி கேம்பில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும், மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவருக்கு தேவையான வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள மதராஸி முகாம் குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள தமிழர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.