TN Govt announcement Applications welcome for the kalaignar Pen Award  

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஒவ்வோர் ஆண்டும் தமிழ்கத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டது.

அவ்வகையில் 2024ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில் ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன் பாரட்டுச் சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும்.

Advertisment

பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும். விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பதாரர்களில் ஒருவரே விருதாளராக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். குழுவின் முடிவே இறுதியானது. எனவே தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு 30.04.2025க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.