Skip to main content

நூறுநாள் வேலையில் மூதாட்டி உயிரிழப்பு... நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் செரியலூர் இனாம் ஊராட்சியில் உள்ள கரம்பக்காடு இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவரது மனைவி சிவயோகம் (வயது 65). இன்று நூறு நாள் வேலை திட்டத்தில் கரம்பக்காடு இனாம் கிராமத்தில் உள்ள ஆலாயக்குளம் சீரமைப்புப் பணிக்கு வந்து, தனது பதிவு அட்டையை தளமேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு பணி செய்துகொண்டிருந்த போதே மயங்கிவிழுந்துள்ளார். 

 

அங்கு நின்ற பெண்கள் சத்தம் போட்டு சிவயோகம் மகனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். மகன் வந்து மயங்கிக் கிடந்த தாயாரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று பரிசோதித்த போது, சிவயோகம் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சடலத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்துவிட்டனர். 

 

இந்த நிலையில், நூறு நாள் பணியின் போது மரணமடைந்த சிவயோகம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சாலை மறியலுக்கு அவரது உறவினர்களும் பொது மக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன், கீரமங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் வந்து பொதுமக்களின் கோரிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் பேசினார். "பணியின் போது இறந்த மூதாட்டிக்கு உடனடியாக ஒன்றிய அலுவலகம் மூலம் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், முதலமைச்சர் நிவாரணம் கிடைக்க வருவாய்த்துறை மூலம் கோப்புகள் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்தார்.
 

cnc

 

மேலும் சிவயோகத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை என்பதால் முதல்வர் பொது நிவாரணத்தைத் தடை செய்யாமல் வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு திரண்டிருந்த பொதுமக்கள் களைந்துசென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.