
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) சட்டப்பேரவையில் தொடங்கியது. இதனையொட்டி 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார்.
இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதற்கிடையே பல்வேறு மசோதாக்களும் அவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதில் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதா நிறைவேறியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே சட்டமன்றத்தில் 18 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் கொடுத்துள்ளார். ஒப்புதல் அளித்துள்ள 4 மசோதாக்களும் நிதித்துறை சார்ந்தது ஆகும். மீதமுள்ள 14 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் மிக முக்கியமாகக் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவிற்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்.’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.