Skip to main content

அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதா?- தமிழக அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றச்சாட்டு!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

tn government staffs allowance


தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில மையம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அகவிலைப்படி மறுப்பு... பொதுவைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு என பல்வேறு வடிவங்களில் அரசு ஊழியர்களுக்குச் சம்பள வெட்டு. நிதி ஆதாரங்களைப் பெருக்க ஆயிரம் வழிகள் இருக்கு! அரசு ஊழியர் வயிற்றிலடிப்பதை அரசே உடனே நிறுத்து! கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் எடுக்கப்பட்டு வருகிறது. 

நம்நாட்டிலும், தமிழகத்திலும் இவ்வகையில் எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைகளினால் அனைவரும் பொருளாதாரச் சிக்கல்களில் விழி பிதுங்கி நிற்கின்றனர் எனபது உண்மையே. இதற்காக அரசுகள் கூடுதலான நிதிஒதுக்கிச் செயல்பட வேண்டியது அவசியமே. இதற்கான நிதி ஆதாரங்களைப் பெருக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது, அரசு ஊழியர்களும் பொதுமக்களின் ஒரு பகுதியினர்தான் என்பதும், இன்றைய அனைத்து பொருளாதாரப் பாதிப்புகளும் அரசு ஊழியர்களையும் பாதிக்கிறது என்பதை மறந்து ஒதுக்கி விட்டு மத்திய, மாநில அரசுகள், அரசுஊழியர்களை வஞ்சிக்கும் வகையில் ஒன்றறை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி மறுப்பு, ஓராண்டிற்கு பொது வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு எனப் பல்வேறு வடிவங்களில் சம்பள வெட்டினை அமல்படுத்தி அரசு ஊழியர்களின் அடிவயிற்றிலடிப்பதை உடனே நிறுத்தி அரசாணைகளை உடன் திரும்பப் பெற வேண்டும். 

இன்றைய நிலையில் மத்திய அரசின் ஒராண்டு பட்ஜெட் 36 லட்சம் கோடிகள். இதுபோல் அனைத்து மாநில அரசுகளின் மொத்த பட்ஜெட் 62 லட்சம் கோடிகள். ஆக மொத்தம் நம் நாட்டின் மொத்த பட்ஜெட் ஆண்டொன்றுக்கு 98 லட்சம் கோடிகள். இதில் விழாக்கள் உள்ளிட்ட ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தாலே சுமார் 10 சதவீதம் என்ற வகையில் 9.8 லட்சம் கோடிகள். சாலைகள் அமைத்தல், அரசு கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு கட்டுமானம் என்ற வகையில் ஆண்டொன்றுக்குச் செலவு 28 லட்சம் கோடிகள், இதில் மூன்றில் ஒரு பங்கினை ஓராண்டிற்கு ஒத்தி வைப்பதால் மட்டுமே 9 லட்சம் கோடிகள் கிடைக்கும். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தால் சுமார் 5 லட்சம் கோடிகள் கிடைக்கும். 

தற்போது நாடு கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும் இச்சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனச் செலவுகள், இலவச சலுகைகள் அனைத்தும் குறைக்கப்பட வேண்டும். அதேபோல் பெரும் பணக்காரர்களின் சொத்து வரி இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். இப்படிப் பல்வேறு வழிகளில் நிதி ஆதாரங்களைப் பெருக்கி, இன்றைய நிலையில் கரோனா வைரஸ் தொடர்பான பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க சுமார் 25 லட்சம் கோடிகள் என்பது போதுமான ஒன்றே. 

அதைவிடுத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் வகையில் முன்வரிசையில் உள்ள அரசுஊழியர்களின் ஊதியவெட்டு என்பது அடுத்தடுத்து உள்ள அனைத்துத் தரப்பு தொழிலாளர்களையும் பாதிக்கும் வகையில் தான் அமையும். 

 

tn government staffs allowance

முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டிய அரசாங்கம், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. ஏற்கனவே அரசுஊழியர்கள் அனைவரும் தங்களில் ஒரு நாள் ஊதியத்தைத் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்குத் தானாக முன்வந்து வழங்கியுள்ள நிலையில், பல அரசுஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியம், மூன்று நாள் ஊதியம் எனவும் வழங்கியுள்ளனர். 

தற்போது இந்த இக்கட்டான சூழலில், கரோனா எதிர்ப்புப் போரில் முன்களப் படை வீரர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவத் துறை, பொதுச் சுகாதாரம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மின்சாரவாரியம், காவல்துறை போன்ற அனைத்துத் தரப்பு அரசுஊழியர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருப்பதோடு அவர்களுக்கு உற்சாகத்தைத் தரவேண்டிய அரசு மாறாக துரோகம் இழைப்பதாகவே கருதுவர்.
 

http://onelink.to/nknapp


எனவே, அகவிலைப்படி பறிப்பு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறுப்பு என எவ்விதமான சம்பள வெட்டு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு, உடனே இவைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

அரசின் இத்தகைய தவறான நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், அனைத்துத்துறை சங்கங்களும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு முறையீடு அனுப்புவது என்றும், மே முதல் வாரத்தில் கறுப்புப் பட்டை அணிந்து பணி செய்வது போன்ற இயக்கங்களை நடத்துவது என்றும் முடிவெடுத்திருக்கிறோம். 

ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வியும், ஜனார்த்தனனும், அனைத்துத்துறை சங்கங்களின் முடிவை இவ்வாறு தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லியோ சிறப்புக் காட்சி - தமிழக அரசு கட்டுப்பாடு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

leo special shows Tamil Nadu Govt Guidance

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இதற்கு முன்னதாக இசை வெளியீடு ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய வசனம், சென்சார் செய்யாமல் திரையரங்கில் திரையிட்டது, அதன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களின் செயல், நடனக் கலைஞர்கள் ஊதிய புகார் எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் சிக்கியது. இதனிடையே படக்குழுவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக தமிழக அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் கட்டணம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லியோ சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.

 

சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க உத்தரவு. சிறப்புக் காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு. மேலும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

 

 

Next Story

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Increase in Fishing Prohibition Allowance

 

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினைக் களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.

 

இத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, மீனவர்களின் துயரினை போக்கிடும் வகையில் கடந்த 18 ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2024 - 25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கடந்த 22 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 79 ஆயிரம் கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.