Advertisment

அரிக்கொம்பன் யானை விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்த தமிழக அரசு

tn government has announced that the elephant will be released in the dense forest

Advertisment

கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பலரது வீடு மற்றும் பொருட்களைச் சேதப்படுத்திவந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனிடையே அரிக் கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகப் போக்குகாட்டி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்தி இன்று பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றிச்சென்ற வனத்துறை அதிகாரிகள் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடவுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த மே 27 ஆம் தேதி கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுழைந்த அரிக்கொம்பன் யானை, விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும். அத்துடன் குழு அமைத்து அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்பதாலேயே, அவை ஊருக்குள் நுழைகின்றன’எனக் கருத்து தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்றும், அரிக்கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதியான முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

elephant tngovt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe