/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udhay444.jpg)
"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பயணத்திற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று (21/12/2020) கடலூர் மஞ்சக்குப்பத்தில் திறந்த வேனில் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "நாடாளுமன்றத் தேர்தலில் காணப்பட்ட எழுச்சி மீண்டும் மக்களிடையே காணப்படுவதால் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது. நிவர், புரெவி என தொடர் புயல், மழை தாக்கத்தால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலில் வந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது சென்னையில் தூங்கிக் கொண்டிருந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு பல ஆயிரம் கோடிக்கு தமிழகத்திற்கு முதலீடுகள் வந்துள்ளதாகத் தொழில்முனைவோர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குரிய அறிகுறிகள் இல்லை. இது குறித்த வெள்ளை அறிக்கை கேட்டபோது, இதுவரை கிடைக்கவில்லை. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரை அ.தி.மு.க.வினருக்கே தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓ.பி.எஸ். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை அதற்கான விடை கிடைக்காமல் புரியாத புதிராகவே உள்ளது. ஜெயலலிதா இறப்பு குறித்து நடத்திய விசாரணைக்கு ஆஜராக அழைத்த போதும் அவர் ஆஜராகவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும். அடிமை அதிமுக அரசுக்கும், மத்திய பாசிச பாஜக அரசு ஆட்சிக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும்" என்றார்.
பின்னர் கடந்த 2004- ஆம் ஆண்டு சுனாமியால் தேவனாம்பட்டினத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)