
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற திமுக கூட்டணி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டும் 66 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி அன்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.
இதனிடையே, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று (10/05/2021) காலை 09.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் யார் ஓ.பி.எஸ்.சா? ஈ.பி.எஸ்.சா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவை. இதனால், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்கிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.