tn assembly interium budget 2021 finance secretary pressmeet

Advertisment

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02% ஆக இருக்கும். தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வருவாய் குறைந்து, கூடுதல் செலவு ஏற்பட்டதால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் அரசின் கடன் வாங்கும் அளவு குறையும். நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய வரி ஏதும் விதிக்காமல் வருவாய் கணக்கீடு இருக்கும். தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் கட்டுக்குள் இருக்கிறது. மாநிலத்தின் மொத்தக் கடனானது 15- வது நிதிக்குழு அளித்த குறியீட்டிற்குள்தான் உள்ளது. கடன் வாங்குவதில், ஜிடிபி மற்றும் 15 வது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதே, விலை உயர காரணம். மக்களுக்கு சாதகமாக இருக்கும் முறையிலேயே கடந்த ஆண்டு வரியை மாற்றியமைத்தோம். 2020 - 2021 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூபாய் 30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான எஞ்சிய ரூபாய் 7,000 கோடி நிதி, வரும் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள ஆசிரியர்களைக் கொண்டு 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். 2021 - 2022இல் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 35,668 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.