Skip to main content

'கூடுதலாக 1,650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கும்' - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interim budget 2021 ops announcement

 

2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், "சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்புகள், 2020-ஆம் ஆண்டில் 8,060 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. நீதியை விரைவாகவும், முனைப்பாகவும் வழங்குவது ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும் நவீன நாட்டின் முக்கிய அம்சமாகும். 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இந்திய நீதி அறிக்கைகளில் நீதித்துறை என்ற பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குதல், தகவல்தொடர்பு அமைப்புகள், மீன் பதப்படுத்தும் வசதிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாயிரம் இழுவலை மீன்பிடி படகுகளை மாற்றுவதற்கான சிறப்புத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 42 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளன. மீனவர்களின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 2020 - 2021 ஆம் ஆண்டில் 301.31 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கான மூலதன செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் ரூபாய் 580.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூபாய் 1,374 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் தேசிய நீர் விருதுகளில் தமிழகம் முதலிடத்தை வென்றுள்ளது.

 

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். அத்திக்கடவு - அவிநாசி வெள்ளக்கால்வாய் திட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வள ஆதார திட்டங்களுக்காக 2021 - 2022 இல் ரூபாய் 6,453.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் வலையமைப்புத் திட்டத்திற்காக ரூபாய் 287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள் முடிக்கப்படும். விவசாயிகளின் பயிர்க்காப்பீடு திட்டத்துக்காக ரூபாய் 1,738.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் வேளாண்துறைக்கு ரூபாய் 11,982.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஹார்வர்டு, ஹுஸ்டனைத் தொடர்ந்து, டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கும் தமிழ் இருக்கை அமைய நிதியுதவி அளிக்கப்படும்.

 

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (ஊரகம்) ரூபாய் 3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூபாய் 3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022 இல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு ரூபாய் 2,350 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூபாய் 1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டத்திற்கு ரூபாய் 871.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022 கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும். 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, நடப்பு கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை' - புது யோசனை சொன்ன விஜய்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
 'There is no need for NEET in the whole country anymore' - Vijay said

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் பின்னணியில் ஒலித்தபடி மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''நான் இன்று  எதுவும் பேச வேண்டாம் என்று தான் நினைச்சேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது அவ்வளவு கரெக்டாக இருக்காது என தோணுச்சு. நீங்களே கெஸ் பண்ணி இருப்பிங்க எதைப்பற்றி பேசப்போகிறேன் என்று, எஸ்... நீட், நீட் தேர்வு பற்றி தான். இந்த நீட் என்பது நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவ மாணவிகள் குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட  வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள். இது சத்தியமான உண்மை.

இந்த நீட்டைப் பற்றி ஒரு மூன்று பிரச்சனைகளாக நான் பார்ப்பது ஒன்று; நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. 1975 க்கு முன்னாடி பார்த்தால் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அதனை ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினையாக ஸ்டார்ட் ஆச்சு. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு இது பேசிக்காவே கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற மாதிரி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள் பார்வைகள் இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை. பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் என்று சொல்ல முடியாது.

மாநில மொழியில் படித்துவிட்டு என்.சி.இ.ஆர்.டி சிலபஸில் தேர்வு வைத்தால் எப்படி அதுவும் கிராமபுரத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இது எவ்வளவு கடினமான விஷயம். போன மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு  சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு  நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மெடிக்கல் காலேஜ் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ ஆகிய நிறுவனங்களில் வேண்டுமானால் நீட் எக்ஸாம் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். இது என்னுடைய சஜ்ஜஷன்தான் இது நடக்குமா? உடனே நடக்காது எனவும் தெரியும் அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் எனக்குத் தெரியும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.

Next Story

கோடநாடு விவகாரம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin said So far 268 witnesses have been examined in Kodanad case

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வருகிறது. அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரம் இன்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆய்வு செய்தால் 221 தொகுதிகளிலும் திமுக வென்றுள்ளது. 2026இல் வெற்றிபெற்றுடுவோம் என்ற மமதையில் கூறவில்லை, மனசாட்சிப்படியே கூறுகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் அரசின் நடவடிக்கைகள் போதவில்லை எனக்கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி. ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் பேசியபோது இனி கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அல்லது அதனால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்தான் பொறுப்பு. அதனால் கடும் நடவடிக்கையை எடுங்கள் என்று கூறியிருக்கிறேன். 

கள்ளச்சாராயம் போன்றே போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளைப் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. அரசு எதையும் மறைக்க வில்லை; முழுமையாக விசாரித்து வருகிறது.

கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு சட்ட ஒழுங்கை காப்பதில் வெற்றிகரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காவல்துறைக்கான 190 அறிவிப்புகளில் 179 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்துவருகிறது. தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மனித வளர்ச்சி குறியீடு என எல்லா வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளது.” என்றார்.