tn assembly election voter list chennai high court election commission

Advertisment

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் 16- ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்நிலையில், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் புரட்சி தலைவி அம்மா பேரவையின் பொறுப்பு செயலாளர் ஆர்.சதாசிவம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

மனுவில், கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வழங்கிய மாற்று குடியிருப்பின் மூலம், ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 4188 பேரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணிதொகுதியைச் சேர்ந்த 2871பேரும், சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

அவ்வாறு அவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த பின்னரும், அவர்களது பெயர்கள் இன்னும் இந்த தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையர், சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் கடந்த ஆண்டு நவம்பர் 16- ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.

கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டும், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்யும் பொருட்டும், குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘கடந்த 20- ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்த வாக்காளர் பட்டியலின் படி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், துறைமுகம், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து குடிபெயர்ந்த 12 ஆயிரத்து 32 வாக்காளர்களின் பெயர், சம்மந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல்,நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் சரி செய்யப்படும்.’ என உத்தரவாதம் அளித்தார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.