தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பேரவையில் இன்று (17/03/2020) நடந்த விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "கரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். கரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவருக்கும் 'Work From Home' அளிக்க நடவடிக்கை தேவை" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் வரவேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா இருக்கிறதா என தமிழகத்தில் இதுவரை 1.80 லட்சம் பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. தினந்தோறும் 500 பேரை பரிசோதனை செய்வதற்கான ஆய்வகங்கள் தயார் நிலையில் உள்ளன" என்று கூறினார்.
இதனிடையே கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க பேரவையில் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "கரோனா காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. கரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். என்னை உள்பட எம்எல்ஏக்கள் அனைவரையும் பரிசோதித்துத்தான் பேரவைக்கு அனுப்புகிறார்கள். சட்டப்பேரவையில் அனைத்து விதமான தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன" என்றார்.