Skip to main content

ஏற்காட்டில் டி.எம்.செல்வகணபதி கிடா விருந்து! சேலம் திமுகவில் டென்ஷன்!!

 

se


ஏற்காட்டில் திமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களுக்கு மாபெரும் கிடா விருந்து வைத்து அசத்தியிருக்கிறார், அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி. திடீர் விருந்துக்கான காரணம் தெரியாததால், அவருக்கு எதிர் முகாமில் இருக்கும் மத்திய மாவட்ட திமுகவினர் உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளனர்.

 


தமிழகத்தில் கடந்த 1991-1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த டி.எம்.செல்வகணபதி மீது சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்றார். 

 

se


இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அவர் அதிமுகவில் இருந்து விலகி, கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். 2009ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் செல்வகணபதியின் உழைப்புக்குப் பரிசாக, 2010ல் அவரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கி அழகு பார்த்தது திமுக தலைமை. நிலைமை சீராக போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த 2014, ஆகஸ்ட் 19ம் தேதி, சுடுகாட்டுக்கூரை ஊழல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

 


அதைத் தொடர்ந்து அவருடைய மாநிலங்களவை எம்.பி. பதவி பறிபோனது. எனினும், அவரை கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமித்தது திமுக. இந்நிலையில், 27.10.2017ம் தேதி, சேலத்தில் 27வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக செல்வகணபதி தரப்புக்கும், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்று நள்ளிரவு மர்ம நபர்கள், செல்வகணபதி தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரில் பெட்ரோல் குண்டை வீசினர். 

 


முதலில் ராஜேந்திரன் தரப்பினர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றே யூகங்கள் கிளம்பின. காவல்துறை விசாரணையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது செல்வகணபதியின் ஆதரவாளர்தான் என்பது தெரிய வந்தது. இது, செல்வகணபதி மீது கட்சியின் தலைமைக்கு பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டுவிட்டது.

 


ஆனாலும் டி.எம்.செல்வகணபதி, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோருடன் இணக்கமாக இருந்து வருவதும், வழக்கறிஞர் ராஜேந்திரனுடன் தாமரை இலைமேல் தண்ணீர் போல இருப்பதும் நீடிக்கிறது. 

 

se


இந்நிலையில்தான், ஏற்காட்டில் உள்ள 'திலகம் நெஸ்ட்' ஹோட்டலில் அண்ணா நினைவு நாளான, கடந்த 3.2.2019ம் தேதியன்று, தனது ஆதரவாளர்களுக்கு மாபெரும் கிடா விருந்து அளித்திருக்கிறார் டி.எம்.செல்வகணபதி. இதில், வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம், பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரும் அவர்களுடைய ஆதரவாளர்களும்கூட கலந்து கொண்டு, விருந்தை சிறப்பித்துள்ளனர். விருந்துக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், செல்வகணபதி திமுகவில் இணையும்போது அவருடன் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் என்கிறார்கள், விருந்தில் கலந்து கொண்ட திமுக பிரமுகர்கள்.

 


''ஏற்காடு கொட்டச்சேடு - குப்பனூர் வழித்தடத்தில் உள்ள சூரக்குடி முனியப்பன் சாமி ரொம்பவே சக்தி வாய்ந்ததுங்க. அந்த முனியப்பனுக்கு ஏ-ழு வருஷத்துக்கு முன்னாடி டி.எம்.செல்வகணபதி ஏதோ ஒரு வேண்டுதல் வெச்சிருந்தாராம். அது பலிச்சிடுச்சுனும், அதுக்காகத்தான் கிடா வெட்டினதாகவும் சொல்றாங்க. இந்த விருந்துல ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க கலந்துக்கிட்டாங்க. ஏற்காடு ஒன்றியத்தைக் காட்டிலும் தலைவாசல், ஆத்தூர் ஆகிய ஒன்றியங்களில் இருந்துதான் அதிகளவில் விருந்துக்கு வந்திருந்தாங்க.

 


வேண்டுதல்தான் பலிச்சுடுச்சே... என்ன வேண்டுதல்னு இப்பவாவது சொல்லுங்கண்ணேனு பல பேர், செல்வகணபதிக்கிட்ட கேட்டுட்டாங்க. அவரும் சிரிச்சே மழுப்பிட்டார். கிடா மட்டுமின்றி சுவையான நாட்டுக்கோழி வருவலும் விருந்துல இடம்பிடிச்சிருந்தது. இந்த விருந்துக்கு சில நாள்கள் முன்னாடியே, கட்சிக்காரர்களை கலந்து கொள்ளும்படி, அவருடைய ஆதரவாளர் ஒருவர் எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தார். விருந்து முடிந்ததும் கட்சியினர் பலர் அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்,'' என்றார் திமுக பிரமுகர் ஒருவர்.

 


வேறு சிலரோ, சூரக்குடி முனியப்பனுக்கு, தனது அரசியல் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று நேர்ந்து கொண்டு மூன்று கருப்பு கிடாக்களை டி.எம்.செல்வகணபதி வெட்டியதாகவும், அதைத்தான் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியிருக்கிறார் என்றும் கூறினர்.

 


''திமுக தலைவர் கலைஞர் மறைவால் இந்தாண்டு கட்சி சார்பில் பொங்கல் விழாகூட கொண்டாடப்படவில்லை. அப்படியிருக்கும்போது செல்வகணபதி போன்ற கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரே, தனது ஆதரவாளர்களைத் திரட்டி கிடா விருந்து வைத்திருப்பது அதிருப்தியாகத்தான் இருக்கிறது. இந்த விருந்து எதற்காக நடந்தது, சிலர் யூகிப்பதுபோல ஏதாவது உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட விருந்தா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார் சேலம் மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர். 


இது தொடர்பாக கருத்தறிய டி.எம்.செல்வகணபதியை அவருடைய செல்போன் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. 

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்