Skip to main content

மேலும் மேலும் வேதனைதான்... -த.மா.கா. குரல்!

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

TMC UVARAJ STATEMENT

 

இங்கு எதுவுமே இன்னும் தொடங்கவில்லை. தொழில் புரிவோர் இயல்பு வாழ்க்கையை எப்போது வாழ்வார்கள் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு அறிவிக்கும் அறிவிப்புகள் மன வேதனையை ஏற்படுத்துகிறது என பா.ஜ.க கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக த.மா.கா இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா விடுத்துள்ள அறிக்கையில்,

"கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பொருட்டு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கு பலரது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பலர் பணி இழந்தும், ஊதியம் கிடைக்காமலும் துயருற்று வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்களின் செயல்பாடு அப்படியே அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது,

வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு இப்போதுதான் ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்பட அரசு அனுமதியளித்து வருகிறது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக மார்ச் 15 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து இப்போதுதான் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.  இன்று முதல் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த வரி விதிப்பு முறையை இன்னும் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இயங்கும் மத்திய அரசை த.மா.க இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்” - த.மா.கா கோரிக்கை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
TMc demand Election rules should be relaxed

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த மாநிலங்களிலும், விரைவில் தேர்தல் முடியும் மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) தளர்த்த வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களில் தேர்தல் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதல் கட்டத்துக்குப் பிறகு, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முழு முடிவும் வெளியாகும் வரை எம்.சி.சி. இருக்கும்.

எனவே, எம்சிசியை ரத்து செய்ய இன்னும் 3 முதல் 5 நாட்கள் ஆகும். அதுவரை ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சித் தலைவர்கள், பல்வேறு அரசு, மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்கவோ, பொதுமக்கள் குறைகளைக் கேட்கவோ முடியவில்லை. வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு, மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அரசு விழாக்கள், புதிய பணிகளுக்கான பூமி பூஜை, நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் விநியோகம், பொதுமக்கள் மனுக்கள் பரிசீலனை, டெண்டர் அழைப்பு போன்றவை நடக்கவில்லை. தேர்தல் நிலுவையில் உள்ள மாநிலங்களில் MCC விதிகளை அமல்படுத்துவது நியாயமானது. ஆனால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் எம்சிசியை அமல்படுத்துவது நியாயமானதல்ல. எம்.சி.சி தளர்வு மற்றும் தேர்தல் முடிந்த மாநிலங்களில் இயல்பான நிர்வாகம் ஆகியவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் செயல்முறையை பாதிக்காது, ஏனெனில் இங்கு திமுக  ஆட்சி வெளியிடும் அறிவிப்பு அண்டை மாநிலங்களின் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

மாநிலத்தில் 45 நாட்கள் நிர்வாகம் தேக்கம் அடைந்திருப்பது மக்களை, குறிப்பாக அரசாங்க உதவியை நாடும் ஏழை மற்றும் ஏழை மக்களைப் பாதிக்கும், மேலும் தேர்தல் ஆணையத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஏப்ரல் 19ம் தேதி இரவு 7 மணிக்கும் நள்ளிரவுக்கும் அறிவிக்கப்பட்ட இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் தேர்தல் ஆணையம் செய்த குழப்பம்  மற்றும் முறையான ஆவணங்கள் இல்லை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்தது, பணம் ரூ.50000 உச்சவரம்பு நிர்ணயம் செய்வது குறித்து இங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே, மருத்துவமனை, கல்லூரி சேர்க்கை, திருமணம், சொத்துப் பதிவு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு பணத்தை எடுத்துச் செல்வதில் தேர்தல் விதிமுறைகள்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. எனவே  த.மா.கா  இளைஞர் அணி சார்பாக  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.