தமிழ்நாடு அரசு சமீபத்தில் வீட்டு வரி மற்றும் சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தியது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக திருச்சி ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மனு கொடுத்துள்ளனர். இதில், அக்கட்சியின், மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, கே.வி.ஜி.ரவீந்திரன், திருச்சி குணா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் கூறியிருப்பதாவது, " தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த மூன்று, நான்கு வருடமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் நசிந்து, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏழை எளிய, நடுத்தர மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த திமுக அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பினை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டுகிறோம்.
மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின்துறை அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும் ஒரு காரணம் சொல்லியுள்ளது. எனவே தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" . இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்நிகழ்வில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.