ADVERTISEMENT

உறவினரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை...

11:03 PM Aug 20, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் செந்தில்குமார், வயது 34. இவர்கள் சித்தப்பா நடராஜன் மகன் தனசேகரன், வயது 37. இவர் எம்.சி.ஏ. படித்து முடித்துவிட்டு சென்னையிலுள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனசேகரன் தனது தந்தை நடராஜன் இறந்துவிட்டதால் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து, தனது தந்தையின் ஈமச்சடங்கை முடித்த பிறகு அவருக்கு சொந்தமான நிலத்தை வாரிசு என்ற முறையில் விற்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதற்காக வாரிசு சான்றிதழ் வாங்கி தருமாறு செந்தில் குமாரிடம் கூறியுள்ளார். அந்த வாரிசு சான்றிதழில் தனசேகரன் தனது சகோதரி பெயரைச் சேர்க்க வேண்டாம், நான் மட்டுமே வாரிசு என்று வாரிசு சான்று பெற்று நிலத்தை விற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் செந்தில்குமார் தனசேகரன் சகோதரியிடம் இந்த விஷயத்தைச் சொல்லியதால் தனசேகரன் சகோதரியின் ஒப்புதல் இல்லாமல் வாரிசு சான்றிதழ் பெற முடியாமல் போய்விட்டது, அதனால் தந்தையின் நிலத்தையும் விற்க முடியவில்லை. இதனால் தனசேகரன் செந்தில்குமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி செந்தில்குமார் வேப்பூரில் உள்ள தனது சோடா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தனசேகரன் செந்தில்குமாரிடம் சென்று அன்பாகப் பேசி அருகிலுள்ள ஊருக்கு கொண்டுவந்து விடுமாறு கேட்டுள்ளார். அதற்காக செந்தில்குமார் பைக்கை எடுத்து அதில் தனசேகரனை அமர வைத்துக்கொண்டு அந்த பைக்கில் இருவரும் சிறிது தூரம் சென்றுள்ளனர். பைக்கின் பின்னாடி உட்கார்ந்து இருந்த தனசேகரன் திடீரென்று செந்தில்குமாரின் தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் செந்தில் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த செந்தில்குமார் வேப்பூர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் தனசேகரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். சில தினங்களில் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்துள்ளார். தனசேகரன் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர் வேப்பூர் போலீசார். இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் மேற்படி வழக்கில் தீர்ப்பளித்தார். அதில் செந்தில்குமாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தனசேகருக்கு ஆயுள் தண்டனையும் 2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி வாதாடியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT