Skip to main content

“ஆலமரமாய் நினைத்தோமே, தவிக்க விட்டுவிட்டு சென்றாயடா தம்பி..”  - மாணவனின் இறப்புக்கு கலங்கிய ஆசிரியர்

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Tiruvarur District Muthupet Government school student passes away

 

சமீபகாலமாகவே மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஆசிரியர், ஆசிரியரை தாக்கிய மாணவன், இப்படியான செய்திகளே பக்கங்களை நிரப்பி படிப்பவர்களின் மனதை ரணமாக்கிவரும் நிலையில், பள்ளி சிறுவன் ஒருவனுக்காக சக ஆசிரியர்கள் கலங்கியதும், அவனைப்பற்றி மறக்கமுடியாத நினைவுகளை முகநூலில் பதிவிட்டிருப்பதும் படிப்பவர்களின் மனதை கனக்க செய்கிறது.

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் பாலபாரதி, பெயருக்கு ஏற்றார்போலவே பேச்சும், பழக்க வழக்கங்களும், முதிர்ச்சியான நற்பண்புகளுமே அவனை பலரது மனதையும் கவர செய்துள்ளது. அவனது இறப்பு செய்திதான் சக ஆசிரியர்களை கலங்க செய்துள்ளது.

 

பாலபாரதியின் ஆசிரியர்களில் ஒருவரான ஆசிரியர் சித.க. செல்வசிதம்பரம் தனது முகநூலில் இப்படி எழுதியிருக்கிறார், “ஆழ்ந்த இரங்கல் டா தம்பி பாலபாரதி. ஐந்தாம் வகுப்புவரை மங்களூர் தொடக்கப் பள்ளியில் படித்தான், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தான், அவன் சேர்ந்த அன்றே மங்களூர் பள்ளியின் ஆசிரியர் சகோதரி ஒருவர் தொலைபேசியில் என்னை அழைத்தார், "பாலபாரதி கெட்டிக்காரப் பையன் நல்லா படிப்பான், அழகா பேசுவான்" என்றார். அவர் சொன்னதுபோலவே எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்த அன்றே என்னிடம் ஒட்டிக் கொண்டான். சிரமமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், தன்னம்பிக்கை மிகுந்த பேச்சும், பெரிய மனிதரைப் போல பேச்சில் முதிர்ச்சியும், காலையில் வந்தவுடன் என்னை தேடி பிடித்து வணக்கம் சொல்லி செல்வதும் மறக்கமுடியவில்லை. ஆறாம் வகுப்பு சேர்ந்த புதிதில் விளையாடும்போது கீழே விழுந்து சிறு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மூன்று தையல் போட்டார் அங்கிருந்த பெண் மருத்துவர். தையல் போட்டு முடித்தவுடனே இரண்டு கைகளையும் கூப்பி மருத்துவரை நோக்கி, “ரொம்ப நன்றிங்க டாக்டர்; வலிக்கவே இல்லை” என்றான். அடுத்தநொடியே என்திசை நோக்கி கைகளைக் கூப்பி கும்பிட்டவாறு “உங்களுக்கும் நன்றிங்கசார், உடனே என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததற்கு” என்றான். சுற்றியிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் பயங்கரமாக சிரித்துக்கொண்டே இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று சொல்லித்தந்து அழைத்து வருவீர்களா சார் என என்னை கிண்டல் செய்தனர்.

 

மற்ற மாணவர்களைப்போல கூச்சப்படாமலும், ஆசிரியர்களை தவிர்க்காமலும் பல கேள்விகள் கேட்பான். சில நேரம் நாம் சோர்வாக இருந்தால் ஏன் சார் டல்லா இருக்கீங்க என அக்கறையோடு விசாரிப்பான்,  6, 7, 8 மாணவர்கள் டை பெல்ட் அணிந்து வரவேண்டும் என ஏற்பாடு செய்து தந்தோம். நாங்கள் தந்த டையை தொலைத்துவிட்டு வீட்டில் சொல்லி வேறு டை வாங்கித் தரச்சொல்லி மிக நீளமாக அணிந்து வந்தான். அவனை பார்த்ததும் சிரித்தபடியே, “இந்த டை உனக்கு பொருந்தவில்லை பாலபாரதி, உனக்கு வேற டை வாங்கி தருகிறேன்” என்றேன். அதற்கு அவன் சொன்னது; “டை நீளமோ, கட்டையோ அதுமுக்கியமில்ல, டை போட்டாலே கெத்து தானே சார், யார் கிண்டல் செய்தால் நமக்கென்ன” என்று பதில் அளித்து வியக்க வைத்தான்.

 

அன்று ஒரு புகைப்படத்தை எடுத்து என் மனைவியிடம் காண்பித்து அவனது கெட்டிக்கார தனத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன், படத்தை பார்த்ததுமே இந்த பையன் பெரிய ஆளா வருவாங்க என்றார் என் மனைவி.

 

ஒருமுறை அரசு மருத்துவர் மாரிமுத்து பள்ளிக்கு வந்து மாணவர்களின் உடல்நலத்தை பரிசோதனை செய்தபோது பாலபாரதியின் பேச்சில் அசந்துபோன டாக்டர் அவன் பேசுவதை வீடியோ எடுத்து எல்லா பள்ளியிலும் உன்னோட பேச்சை காண்பிக்கிறேன் டா தம்பி என கூறிவிட்டு சென்றார்.

 

இப்பொழுது எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை தொலைபேசியில் விசாரித்தபோது கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றார்கள். ஆனால், நேற்று காலை அவன் இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சி தரும் செய்தி என் காதுகளில் இடியாக இறங்கியது. உடனடியாக கிளம்பி அங்கு சென்ற போது மஞ்சள் காமாலை என்று கூறினார்கள். அவனது தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர் எங்களை கண்டு கதறி நின்ற நிலையைப் பார்த்து எங்களால் தாங்கமுடியவில்லை.

 

அனைவரையும் கவரும் பேச்சு பெரிய மனிதரை போல பண்பாடு, ஆசிரியர்களை மதிக்கும் அன்பு, சிறப்பான படிப்பு, பெரிய ஆளாய் வருவடா பாலபாரதி என உன்னை பலமுறை கூறுவேனே, ஆலமரமாய் வளர்ந்து பலருக்கும் நிழல் தருவாய் என நினைத்தோமே, அனைவரையும் தவிக்க விட்டுவிட்டு சென்றாயடா தம்பி, சாதாரண மனிதர்களுக்கே உன் மீது ஆசை இருக்கும்போது, ஆண்டவனுக்கு மட்டும் உன் மேல் ஆசை இருக்காதா என்ன. அதனால்தானோ அந்த ஆண்டவனே உன்னை ஆசைப்பட்டு அழைத்துக் கொண்டான் போல, அந்த குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கும் காலம் நல்ல மருந்து இடவேண்டும். ஆழ்ந்த இரங்கல் பாலபாரதி" இப்படி பதிவிட்டிருந்தார்.

 

Tiruvarur District Muthupet Government school student passes away

 

இந்த காலத்திலும் இப்படியொரு மாணவனா என ஆசிரியர் செல்வசிதம்பரத்திடம் கேட்டோம், "அவனை மறப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லங்க. ரொம்ப க்யூட்டான பையன். தொடர்ந்து பள்ளிக்கு வந்திருந்தா கவனித்திருப்போம். ஷிப்டு முறையில் ஸ்கூல் நடந்ததால முழுமையாக கவனிக்க முடியல. வெளியில் தெரியாத மஞ்சள் காமாலை அவனுக்கு இருந்திருக்கு. டாக்டர்களிடம் செக் பண்ணியிருக்காங்க, அது வெளியில் தெரியாமல் அவன் உயிரை எடுத்துவிட்டது. ஒரு வாரமா ஸ்கூலுக்கு அவன் வரலயேன்னு வீட்டுக்கு போன் பண்ணி கேட்டோம். அவனோட அப்பா வந்து தம்பிக்கு உடம்பு முடியல சத்து இல்லைன்னு டாக்டர் சொல்லுறாங்கன்னு சொன்னாரு. நாங்களும் சத்து குறைபாடு என்று நினைத்து முட்டை, பழங்கள் என சத்தான பொருளை வாங்கி கொடுங்க என சொல்லி அனுப்பி விட்டோம். ஆனால்  மறுநாள் வந்த செய்தி இடியாக இருந்தது. பாலபாரதி இறந்துவிட்டான் என்கிற தகவல் கிடைத்தும் மண்டை வெடித்துவிடுவதுபோல ஆகிடுச்சி. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன் பிற்காலத்துல மிகபெரிய ஆளாவரவேண்டியவன். இவனோட அம்மாவ பெற்ற தாத்தாவுக்கு நான்கு பெண் பிள்ளைகள், அதுல பாலபாரதியின் அம்மா மூத்தவர், ஆண்கள்பிள்ளை இல்லாத குறையை போக்கி தனக்கு கொள்ளிவைக்கப்போகிற வாரிசு என தன்னிடம்  இருந்த 60 குழி இடத்தை இவனுக்காக எழுதிவைத்தார். மூட்டை தூக்கும் தொழிலாளியான பாலபாரதியின் தாத்தாவிற்கு எப்பவுமே பாலபாரதியின் நினைவுதான். வரும்போதும், போகும்போதும் அவ்வப்போது தனது பேரனை ஏறெடுத்து பார்த்து ஆனந்த கண்ணீரோடு செல்வார். அவனுடைய இறப்பு எங்களாலேயே தாங்க முடியவில்லை. அவர்கள் எப்படி தாங்குவார்கள். இந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது" என்கிறார் கலங்கியபடியே.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.